Thursday, 19 November 2015

வாய்ப்புகளை நாம் தவறவிடுவதற்குக் காரணம் அவை கடினமான சவால்களைப் போலத் தோற்றமளிப்பதுதான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன்.

இன்று காலையில் எழுந்ததும் நீங்கள் குடித்தது காபியா, டீயா? கும்பகோணமோ, பெங்களுரோ காபிக்குத் தனிமவுசு தான்! பில்டர் காபி, காப்பிசினோ, பிளாக் காபி என வேறுபட்டாலும், கொட்டும் மழையில் பால்கனியிலோ, சாலையோரக் கடையிலோ அமர்ந்து கொண்டு ஆவி பறக்கும் காபியை மெல்ல மெல்ல ரசித்துக்குடிப்பது அலாதி மகிழ்ச்சிதான்! இந்தக் காபியை வைத்தே பெரிய கலக்குகலக்கி பணத்தைக் கொட்ட வைத்துள்ளனர் காபிடே நிறுவனத்தினர். 20 வருடங்களில் சுமார் 1400-க்கும் மேல் கிளைகள்! விற்பனை ரூ.2,500 கோடியாம்!! அரட்டை அடிப்பதற்காகவே மக்கள் காபி குடிக்க வருவார்கள் எனும் மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து அதையே பெரும் வியாபாரமாக்கி விட்டார்கள்!!! நீங்கள் தங்க நகையை அடகுவைத்துக் கடன் வாங்கியிருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் முத்தூட் பைனான்ஸ் பற்றித் தெரியாமல் இருக்காது. 128 வருட பழமையான நிறுவனம் என்றாலும், அவர்கள் விசுவரூபம் எடுத்தது 2011-12ல் தான். தங்கம் விலை தாறுமாறாக ஏறியதும், முன்னமே அடகு வைத்த நகையின் மேலேயே அதிகப்பணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனும் தனித்துவம் காட்டினார்கள்; தங்கத்திற்குக் கதவைத் திறந்து கொண்டார்கள்! இன்று அவர்களுக்கு 4000-க்கும் மேலே கிளைகள். நம்ம ஊர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸையே எடுத்துக் கொள் ளுங்கள். மைசூர்பாக்கு எனும் நமது பாரம்பரிய இனிப்பை மைசூர்பா என்று பெயர்சுருக்கி, பெயர்சூட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்று விட்டார்கள். நாம் நம் வாழ்வில் பலமுறை தற்பொழுது சூழ்நிலை சரியில்லை என வருத்தப்படுகின்றோம். அச்சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிப்பது சரிதான். ஆனால் சில சமயங்களில் நாமே எதிர்பார்க்காத அளவில் சாதகமான சூழ்நிலையும் அமைவது உண்டா இல்லையா? கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு வரும் பொழுது உடனே அதைப் பயன்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளையும் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர். வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் வெற்றி பெற்றவர்கள் பலரிடமும் காணப்படும் ஓர் ஒற்றுமை. அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை; அது எடுத்துக் கொள்ளப்படுவது என்பார்கள்! வாய்ப்புகளும் அப்படித்தானே!! பிஎஸ்என்எல் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிறுவனம். வீட்டுத் தொலைபேசியின் உபயோகம் குறைந்து, கைபேசியின் ஆதிக்கம் தொடங்கிய பொழுது மகத்தான வாய்ப்புகள் உருவாகின. ஆனால் அந்நிறுவனம் கோட்டை விட்டது. அக்கோட்டையை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன. வாய்ப்புகளை நாம் தவறவிடுவதற்குக் காரணம் அவை கடினமான சவால்களைப் போலத் தோற்றமளிப்பதுதான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். எனவே அரிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். தப்பிவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள்! எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல் (குறள் 489)

பிற ஆசிய நாடுகளிலிருந்து வளர்ச்சி யடைந்த நாடுகளில் குடியேறியவர் களோடு ஒப்பிடுகையில் இந்தியா விலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். சிங்கப்பூர் (55.8%), பிலிப்பைன்ஸ் (52.3%), சீனா (43.8%) என்ற அளவில் உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவுசார் சமூகத்தின் பங்களிப்பு கணிசமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகையோர் அதிகமிருப்பது கண்கூடு. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களால் அந்நாடுகள் முன்னேறியுள்ளனவா என்று கேட்டால் அத்தகைய கேள்விக்கு விடை கிடைக்காது. ஏனென்றால் பிற நாடுகளிலிருந்து வந்து சேர்ந்த அறிவுசார் மக்களின் பங்களிப்பு வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகம். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அறிவுசார் சமூகம் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து அவ்வப்போது ஆட்சியாளர்கள் கவலைப்படுவர். ஆனால் அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத்தான் எடுப்பதில்லை. கடந்த செப்டம்பரில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலிருந்து வெளியேறுவோர் (பிரைய்ன் டிரெய்ன்) இந்தியா திரும்பு வதற்கான காலம் கணிந்து வருகிறது என்றார். இந்தியாவிலிருந்து வெளியேறி வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறி யுள்ள அறிவுசார் இந்தியர்களின் எண்ணிக்கை 36 லட்சமாகும். 2000-வது ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் இது 83 சதவீதம் அதிகம். அதாவது கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. அதிகம் படித்த அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாடு களில் குடியேறிய அறிவு சார் சமூகத்தின் எண்ணிக்கை மொத்தம் வெளியேறியவர்களில் 62 சதவீதமாகும். பிற ஆசிய நாடுகளிலிருந்து வளர்ச்சி யடைந்த நாடுகளில் குடியேறியவர் களோடு ஒப்பிடுகையில் இந்தியா விலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். சிங்கப்பூர் (55.8%), பிலிப்பைன்ஸ் (52.3%), சீனா (43.8%) என்ற அளவில் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 22 லட்சமாகும். இந்தி யாவுக்கு அடுத்தபடியாக அதிக அறிவுசார் சமூகத்தை இழந்த நாடு மெக்சிகோ. இங்கிருந்து 12 லட்சம் பேர் வெளியேறி வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறியுள்ளனர். அறிவுசார் சமூகத்தில் 100 பேரில் 3 பேர் உயர் படிப்பு மற்றும் வேலைக்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறி யுள்ளனர். அதேசமயம் டாக்டர்கள், நர்சுகளின் எண்ணிக்கை மிக அதிகம். 100 பேரில் 8 பேர் இந்திய டாக்டர்களாக உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 86 ஆயிரம் இந்திய டாக்டர்கள் புரிவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த இடத்திலிருக்கும் சீனா விலிருந்து வெளியேறிய டாக்டர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாகும். அதே சமயம் இந்திய செவிலியர்கள் (நர்சுகளின்) எண்ணிக்கை 70,471 ஆக உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியாதான். ஆனால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் 1,800 பேருக்கு ஒரு டாக்டர் உள்ள நிலையில் இதுபோன்று டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேறுவது மனித வளத்தையும் பாதிக்கும். பெரும்பாலும் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, சிலி, செக். குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்ஸம்பர்க், மெக்சிகோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கீசு, ஸ்லோவோக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 34 நாடுகளுக்கு (ஓஇசிடி நாடுகள்) இந்தியர்கள் செல்கின்றனர். இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். இந்தியாவிலிருந்து அறிவுசார் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அந்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று சர்வதேச பொருளாதார அறிஞர் கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய அறிவுசார் மக்களின் திறமைக்கேற்ற வேலை இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான சூழலாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய அறிவுசார் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது நமக்கு சாதகம் என்று மோடி குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்பினால்தான் சாதகம். அதற்கான காலம் எப்போது உருவாகும்? .

ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் பிஎஃப்

மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் எவ் வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள் என்பது தெரியாது. வருமான வரிக்காக பிடிக்கிறார்களா அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை. எவ்வளவு பிடிக்கிறார்கள்? பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள். சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன. நிரந்தர கணக்கு எண் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம். தெரிந்துகொள்வது எப்படி? சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும். இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம். பணம் எடுப்பது எப்படி? பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும். பங்குச் சந்தையில் பி.எஃப். ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது. ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான். நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

Wednesday, 11 November 2015

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!”

இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது. பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும். போலிப் பகலாகும் இரவு இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது. ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும். இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது. படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும். சிந்தனைகளைக் கழட்டுங்கள் வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்? என் பரிந்துரைகள் இதோ: ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள். தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள். தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்! கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள். நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம். அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான். வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம். என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு. நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?