Thursday, 8 October 2015

இதைத்தான் வள்ளுவரும் “சிசுக்கள் அணிக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை விட ஆஸ்திரேலிய அணியிடம் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதே பெருமை” என்கிறார்.

ஔரங்கசீப், ராஜேந்திர சோழன் அலெக் ஸாண்டர். இந்த மன்னர்களிடம் பொதுவான ஒற்றுமைகள் சில இருக்கின்றன. டெல்லி வாழ் ஔரங்கசீப் கிழக்கே சிட்டகாங்கில் நின்று “நம்ம இடந்தேன்...”என்பார். தஞ்சையிலிருந்து கிளம்பிய ராஜேந்திரனுக்குக் கடாரத்தில் “எங்கள் அரசரே..!” என்று நோட்டீஸ் ஒட்டினார்கள். “கிரேக்க கிங்கே...!” என்ற பேனர்களை அலெக்ஸ் சிந்து நதிக்கரையில் கண்டிருக்கக்கூடும்! அந்த அளவுக்குத் தங்கள் ராஜ்யங்களை இவர்கள் விரிவுபடுத்தினார்கள். ஆனால், இவர்களுக்குப் பிறகு அரசு வீழ்ந்ததற்கு அரசின் பரப்பு பெரியதாக இருந்ததும் காரணமாகச் சொல்லப்பட்டது. இவர்களது பிரதிநிதிகள் சொதப்பினார்கள். பெரிய அரசு. பிரச்சினைகளின் எண்ணிக்கையும் அதிகம். இவற்றைச் சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. அகலக்கால் வைத்து அவஸ்தைப்பட அரசர்களால் மட்டும்தான் முடியுமா? “பிஸினஸ்ல கவனம் செலுத்த முடியல...” என்றார் நண்பர். என்ன பிஸினஸ் என்று கேட்க வில்லை. காரணம், அவர் ட்ராவல்ஸ் நடத்துவதாக நினைத்திருந்தேன். அப்புறம் சிட்ஃபண்ட், ரியல் எஸ்டேட் தொழிலுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. கூடுதலாக ஷேர் மார்க்கெட், கட்டிட காண்ட்ராக்டர், ஊரில் விவசாயம்... மொத்தத்தில் “இவரைப் பாத்தாவது கற்றுக்கொள்ளுங்களேன்…” என்று மனைவி சுட்டிக்காட்டி, கணவனுக்கு காம்ப்ளெக்ஸ் ஏற்படுத்த ஒரு உழைப்பாளி இருப்பார், இல்லையா? அந்த அவர்தான்! நடுவில் ஏதோ ஒரு தொழிலில் பணம் லாக் ஆகி, ஒரே பாடலில் முன்னேறும் காட்சி பாதியில் நிற்க, நண்பருக்கு ரத்த அழுத்தம், கொதிப்பு எல்லாம் நிகழ்ந்தன. படிப்பினை என்ன? போதும் என்ற மனநிலை இல்லாததாலேயே சரியத் துவங்கும் அரசுகள், மனிதர்களின் வாழ்க்கைகள்... அளவோடு இருந்திருந்தால்,இவர்கள் இன்னும் சிறிது காலம் தாக்குப் பிடித்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா...? ஆனால், இப்படியெல்லாம் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், இவர்கள் இதற்கு முன்பே அழிந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவர் ஏற்கெனவே செய்துவரும் வேலைகள் போதாமல் “ஊறுகாய் தயாரிக்கலாம்னு இருக்கேன்” என்றால், ஒருவர் எங்கேயோ இருந்துகொண்டு, தொலைதூர நாட்டைக் கைப்பற்றுகிறார் என்றால், அவரிடம் அதற்கான ஆற்றலும் திறமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்? கனவைச் சாத்தியமாக்கும் நிபுணத்துவத்தை, வீரர்களைக் கொண்டிருக்கிறார் என்றுதானே பொருள்? நாடு நீங்கி கடல், மலை கடந்து வீரம் பொழியக்கூடிய சக்தி வாய்ந்த வீரர்களை ஒரே இடத்தில் கத்தியைத் துடைக்கவும், குதிரைக்குப் புல் போடவும் மட்டும் பயன்படுத்தினால்...? “சும்மா இருப்பதே சுகம்” என்று நண்பரைக் கட்டிப் போட்டால்...? அந்த சக்தி, அந்தத் திறமை, சும்மா இருக்காது. முடக்கப்படும் சக்தி தன்னை வெளிப்படுத்தியே தீரும் - பல சமயங்களில் எதிர்மறையாக. அதை அந்த நாடோ வீடோ தாங்காது. சிங்கம் ஒன்றுக்குப் பூனை வேடமிட்டு “உன் பெயர் டாம்” என்றால் அது எவ்வளவு நேரம்தான் ‘மியாவ்’ என்று கத்தும்? ஒரு கட்டத்தில் “ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெய்ட்டுடா… பாக்கறியா?” என்று காலை ஓங்கிவிடாதா?. ஆறாம் வகுப்பு மாணவனை ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளோடு இருக்க வைத்துப் பாருங்கள். அன்பைப் பொழிதல், அ, ஆ சொல்லிக்கொடுத்தல் எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். அப்புறம் “இந்தப் பையைத் தூக்கீட்டு வாடா...” என்ற கட்டளையும் “இந்த அண்ணன் அடிச்சுட்டான் மிஸ்..”என்ற அவலக் குரலும்தான் கேட்கும். சிங்கம் அப்படித்தான் இருக்க முடியும். பிடித்து வைத்தால் தான் இருக்கும் இடத்தையே காடாக மாற்றிவிடும். சரியாக வேலை கொடுக்கப்படாத வீரர்கள் உள்ளூரில் பிரச்சினை பண்ணத்தான் செய்வார்கள். செல்லை நோண்டத் தெரிந்த கை சும்மா இருக்காது. ஆற்றல் கொண்ட மனம் என்பது சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் நிலையில் வைக்கப்பட்ட வாகனம் மாதிரி. சரியாக இயக்கினால் அது ஒழுங்காகப் பயணிக்கும். இல்லை என்றால் அதுவாகவே ஓடி, முட்டி மோதி சேதத்தை ஏற்படுத்திவிட்டு வீழும். திறமை இல்லாமல் இருப்பது குற்றமல்ல. ஆனால் திறமை இருப்பது தெரிந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அது மன்னிக்க முடியாத பாவச் செயலாகும். அதை உங்களுக்கு அளித்த இயற்கையை அவமானப்படுத்துவதாகும். “போதும்… எதுக்கு வீணா கஷ்டப்பட்டுக்கிட்டு?” என்ற போலிச் சமாதானங்கள் பின்னாட்களில் திறமையைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற மனப் புழுக்கத்தில் கிடந்து உழலவே பயன்படும் (எனக்கு இருக்கற திறமைக்கு நான்லாம்... ப்ச… தப்பு பண்ணிட்டேன்...). அந்த ஆற்றலைப் பயன்படுத்தித் தோல்விகளும் பிரச்சினைகளும் வந்தால்கூட அது பெருமையே. இதைத்தான் வள்ளுவரும் “சிசுக்கள் அணிக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை விட ஆஸ்திரேலிய அணியிடம் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதே பெருமை” என்கிறார். எனவே, மன்னர்களின் ராஜ்ஜியங்கள் வீழ்ந்தததற்கும், நண்பரின் சிக்கல்களுக்கும் காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளும் சரியாகத் திட்டமிடாதலும்தான் காரணமே தவிர, அவர்கள் முயற்சி செய்ததே தவறு எனக் கூற முடியாது. அகலக்கால் வைப்பதில் தப்பில்லை. ஆழ்ந்து யோசிக்காமல் வைப்பதுதான் தவறு!

ஆங்கிலேயர்கள் ஜமீன்தாரி முறையைத் திணித்து, இந்திய விவசாயிகளை எவ்வாறு கொடூரமாகச் சுரண்டினர் என்பதும், தங்கள் நாட்டுப் பொருட்களை இந்தியச் சந்தையில் குவித்து இந்திய உற்பத்தியாளர்களை எப்படிச் சாகடித்தார்கள் என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது.

இந்நூல் தமிழில் 1949-ல் முதல் பதிப்பைத் தொடங்கி, 2014 வரை 33 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இதன் அளவிட முடியாத மதிப்பைப் புரிந்துகொள்ளலாம். இந்திய குக்கிராமத்தில் பிறந்து, சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராடு சர்வகலாசாலையில் பேராசிரியராக உயர்ந்தவர் ராகுல்ஜி எனப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். இவரது புத்தகங்களில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் உலகின் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு விரிவாக வாசிக்கப்பட்டுவரும் நூல். 1946-ல் இந்தியில் எழுதப்பட்ட இந்நூல் 1949 ஆகஸ்டில் தமிழில் வெளியிடப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தனது தமிழ்ப் புத்தகாலயம் மூலம் கண.முத்தையா வெளியிட்டார். மூல நூலாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சிறையிலிருந்து எழுதிய நூல் இதுவாகத்தான் இருக்க முடியும். கி.மு.6000-ம் ஆண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான நூல் இது. வாசகர்கள் எழுதில் புரிந்து கொள்ளும் வகையில், முதலில் தான் எழுதிய 'மனித சமூகம்' என்ற நூலை, 20 கதைகளாக ராகுல்ஜி சொல்லியிருக்கிறார். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் மனித குலம் (ஹோமோசாப்பியான்கள்) தோன்றியதிலிருந்து கி.மு. 2500-ம் ஆண்டுக்கு பிந்தைய வரலாறுதான் நம்மிடம் உள்ளது. 2500க்கும், 6000-க்கும் இடைப்பட்ட வரலாற்றை வேதங்கள் தொடங்கி பல்வேறு இலக்கிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு ராகுல்ஜி இந்நூலை வரைந்துள்ளார். அதில் ஓரளவு கற்பனையும் கலக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட இந்நூல், மதப் பழமைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. ஆனால், இந்நூல் ஏற்படுத்திய மிகப் பெரிய தாக்கம் எதிர்ப்பாளர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டுவிட்டது. இந்நூல் வெளியானவுடன் அதனைப் படித்த அறிஞர் அண்ணா, “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது” என்று பாராட்டினார். அன்றைய சென்னை மாகாணத்தில், பிரகாசம் தலைமையிலான சட்டமன்றத்தில் அன்றைய கல்வி அமைச்சர் சுப்பராயன் “இது வெறும் கட்சிப் பிரச்சார நூல் அல்ல. நல்ல தத்துவ விளக்க நூல். எனவே இதனைத் தடை செய்யக் கூடாது” என்று பேசினார். மனித குலம் எங்கே முதலில் தோன்றியது, எப்படி உலகின் பல பகுதிகளுக்குப் பரவியது, அப்போது மனித குலம் சந்தித்த சவால்கள், போராட்டங்கள், இழப்புகள், வளர்ச்சி ஆகிய அனைத்தையும் இந்நூல் பதிவு செய்கிறது. அடிமைச் சமுதாயம் உருவானது எப்படி? ஆரம்பத்தில் மனித இனக் குழுக்கள் புராதன கம்யூனிஸ சமுதாயமாக இருந்தன. பெண்ணின் தலைமையில் இயங்கின. பின்னர் கால்நடைச் சொத்துக்கள் உருவான பிறகு, இனக் குழுக்களிடையே கடும் மோதல்கள் உருவாகின. அப்போர்களில் தலைமை தாங்கி வெற்றிபெற்ற ஆண் அந்த இனக் குழுவின் தலைவனானான். இவ்வாறு தலைமைப் பதவி ஆண்களிடம் வந்தது. பெண்கள் ஒரு குழுவின் சொத்துக்களாகச் சுருக்கப்பட்டு அடிமைகளானார்கள். இனக்குழுக்களுக்கிடையே நடந்த போர்களில் கால்நடைகளுடன் பெண்களும் கவர்ந்துவரப்பட்டனர். தோல்வியுற்ற குழுக்களிடம் கைப்பற்றப்பட்டவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். இவ்வாறு அடிமைச் சமுதாயம் உருவானது. ஆரியர்கள் என்று சொல்லப்படும் பிரிவினர் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அங்கு நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்திருந்த திராவிடர்களுடன் அவர்கள் இடையறாது போரிட வேண்டியிருந்தது. மனித வரலாறு முழுக்க மாற்றச் சக்கரம் ஓயாது சுழன்று கொண்டேயிருந்தது. இது ஆயுதங்களில், ஆடைகளில், உணவு உற்பத்தியில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அடுத்து இஸ்லாம் வரலாறு கூறப்படுகிறது. மதம் தோன்றிய விதம், அது பரவிய விதம், முகலாயர்கள் எப்படி இந்தியாவைக் கைப்பற்றினர் என்பதெல்லாம் விரிவாகக் கூறப்படுகின்றன. முகலாயர்களின் ஆட்சி மத சகிப்புத் தன்மையுடன் சுரண்டலற்ற ஆட்சியாக எவ்வாறு இருந்தது என்பதும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் நலன் குறித்து எந்தக் கவலையும் இல்லாது, செல்வத்தைச் சுருட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் இந்த நூல் சொல்கிறது. ஆங்கிலேயர்கள் ஜமீன்தாரி முறையைத் திணித்து, இந்திய விவசாயிகளை எவ்வாறு கொடூரமாகச் சுரண்டினர் என்பதும், தங்கள் நாட்டுப் பொருட்களை இந்தியச் சந்தையில் குவித்து இந்திய உற்பத்தியாளர்களை எப்படிச் சாகடித்தார்கள் என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. அந்நிய ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் காந்திஜி எப்படி மக்களின் பங்களிப்புக்கு வழிவகுத்தார் என்பதை நடுநிலை நேர்க்கோடு பார்க்கிறார். மனித குல வரலாறு குறித்து நமக்கு இதுவரை இருந்துவந்த பார்வையை இந்நூல் முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. தற்போதைய சமூகத்தைப் புதிய பார்வை, புதிய அணுகுமுறையுடன் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும். கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: veeveekalai@gmail.com நூல் விவரம்: வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ்ப் புத்தகாலயம், தொலைபேசி 28340495, மின்னஞ்சல் - tamilputhakalayam@yahoo.com

இவன்… அந்த சமூகமாக இருப்பான்’ அது குழந்தையின் சாதி பற்றியது என உணர்ந்து மனம் வலித்தது. நாம் குழந்தைகளை எவ்வளவு மோசமாக அனுமானிக்கிறோம். நன்னடத்தை வகுப்பெடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

உலகத்தின் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகளை ரொம்பவும் குறைத்தே மதிப்பிடு கிறோம். குழந்தைகளின் சின்ன சின்ன முயற்சிகளுக்கு பின்னே இருக்கும் பெரிய தியாகங்களைக் கவனிக்கத் தவறுகிறோம். - அமர்த்தியா சென் இந்த ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளிக்கூடங்களில் நன்நடத்தை இயல் நடத்த வாரம் ஒரு வகுப்பு நேரத்தை ஒதுக்குமாறு கூறியுள்ளது. அரசின் இந்த உத்திரவை வாசித்தபோது எனக்கு மாணவர் பவித்ரனின் ஞாபகமே வந்தது. யாரும் கற்பித்து மட்டும் வருவதல்ல சமூக நீதியும் சமூக அக்கறையும் நடத்தையும் என எனக்குக் காட்டியவர் பவித்ரன். குழந்தைகளுக்கான எல்லாக் கதைகளிலும் நீதிபோதனை செய்ய வேண்டும் என்பது பலரின் கருத்து. குழந்தைகளுக்கு நீதி தேவையா என்பது என் போன்றவர்கள் கேள்வி. குழந்தைகள் திட்டம் போட்டுக் கொள்ளை அடிப்பது இல்லை. பெரிய அளவில் பொய், வாக்குறுதிகள் தருவது இல்லை. லஞ்சம் அவர்களது வாழ்வில் இல்லை. எல்லா வகையான நீதியுமே பெரியவர்களுக்குத்தான் தேவை. இதை எல்லாம் அல்லது இதில் ஏதாவது ஒன்றையேனும் அல்லது ஒரு சதவீத அளவேனும் செய்யும் பெரியவர்கள் நாம். நாம் சொல்லும் நீதிகளைக் குழந்தைகள் ஏற்குமா, ஏற்காதா என்பது கூட ஒருபுறம் இருக்கட்டும். அதற்கும் எழுத்து தேர்வுகள் நடத்துவது முறையா? கவனம் ஆனால் குழந்தைகள் வாழ்க்கை நெறியை கற்றுக்கொள்ளவே செய்கின்றன. அமெரிக்க உளவியாளர் லாரன்ஸ் கோல்பர்க் (Lawrence Kohl berg) பல வருடங்கள் நன்னெறி உருவாக்கம் குறித்து குழந்தைகளிடையே ஆய்வுசெய்தார். “குழந்தைகள் தங்களது அன்றாட நடத்தைகள், அவர்கள் பார்த்த பிறரது நடத்தைகளைத் திறந்த மனதோடு பிறருடன் உரையாடுவதன்மூலம், விவாதிப்பதன் மூலம், நல்ல நடத்தை, தீய பாதைகளை கண்டடைகிறார்கள்” என்று அவர் அறிவித்தார். அதில் அவர்கள் தொலைக்காட்சியில் , சினிமா போன்ற ஊடகங்களில் பார்க்கும் நடத்தைகளும் அடக்கம். “குழந்தைகள் எல்லாவற்றையுமே உன்னிப்பாக கவனிக்கிறார்கள்” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு தங்களது அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட தொலைக்காட்சியில் கண்டதை, ரசித்ததை வகுப்பறையில் திறந்த மனதோடு கலந்துரையாட நேரம் ஒதுக்கி இருக்கிறோமா நாம்? நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை தினசரிகளில் வாசித்து, செய்திகளை விமர்சிக்க வீட்டிலோ பள்ளியிலோ அவர்களுக்கு எத்தனை பேர் வாய்ப்புகள் தருகிறோம்? நம் பள்ளிகளின் எழுதப்படாத சட்டம் என்ன? கையைக் கட்டு… வாயைப் பொத்து… கவனி…. பேசாதே… இதைத்தானே கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்கிறது நமது பாடமுறை. அது வேறு என்ன நடத்தை நெறியை போதிக்க முடியும்? பவித்ரன் தந்த அதிர்ச்சி நான் பணிபுரியும் பள்ளியில் பல ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் இது. தீபாவளிக்கு மறுநாள் காலை பட்டாசு சத்தங்கள் ஓயாத அந்த விடுமுறை நாளில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் “ஏதாவது பலகாரம்.. பழைய துணி இருக்கா பிளீஸ்… இருந்தா குடுங்க” என்று வந்து நின்றார். என் தாயாரும் துணைவியாரும் ஏதேதோ கொடுத்து அனுப்பிவிட்டு, “பாவம்…இல்லாத வீட்டு பிள்ளை’’ என்று பேசிக்கொண்டபோது சட்டென நான் ஜன்னல் வழியே கவனித்தேன். எங்கள் பள்ளியில் படிக்கும் பையன். எனக்கு மனதில் படபடப்பு அதிகமானது. பக்கத்து வீட்டுக்காரரும் எட்டிப்பார்த்து. ‘‘உங்க ஸ்கூல் பையனா” என்றார். அவர் வேறு ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியர்… நான் சாலையை பார்த்தபடி வெளியே நின்றேன். ‘‘இந்தக் காலப் பசங்க அப்படி… இந்த மாதிரி வீடுவீடா போய் பிச்சையா வாங்கி அதை வித்துப் படத்துக்கு போவானுங்க சார்…’’ அவரது பேச்சில் இருந்த நக்கல் என்னை உசுப்பேற்றி இருக்க வேண்டும். ‘‘என்ன நடக்குதுனு பின்னால் போய்ப் பார்க்கலாமா’’ என்றேன். இருவருமாக நடந்தபோது சொன்னார். ‘இதெல்லாம் பெற்றோர்களால் வருவது சார். வீட்ல இதைக்கூடவா கவனிக்க மாட்டாங்க…’ பிறகு குரலை தாழ்த்தி ‘இவன்… அந்த சமூகமாக இருப்பான்’ அது குழந்தையின் சாதி பற்றியது என உணர்ந்து மனம் வலித்தது. நாம் குழந்தைகளை எவ்வளவு மோசமாக அனுமானிக்கிறோம். நன்னடத்தை வகுப்பெடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது. அந்த சிறுவனின் பின்னே சென்ற நாங்கள் எங்கள் ஊரின் பார்வையற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் இருந்தோம். அங்கே பவித்ரன் நுழைந்ததும் ஏக குதூகலம். ‘‘அண்ணா வந்துட்டாரு’’ குழந்தைகள் வரவேற்றன. தான் வீடு வீடாய்ச் சேகரித்த உடைகளை, பலகாரங்களைப் பிரித்து வழங்கி தன் தீபாவளியைப் பகிர்ந்துகொண்ட அந்த மாணவனை நான் ஆரத்தழுவிக்கொண்டேன். அதிர்ச்சியிலிருந்து மீண்ட உடன் வந்த ஆசிரியர், விபரம் கேட்டார். ‘‘பாவம் இவங்களுக்கு யாருமே இல்ல சார்’’ என்று கண்கலங்க வைத்தார் பவித்ரன். அவருக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது? ‘‘டி.வி.ல பார்த்தேன். ஸ்மால் ஒன்டர் (கார்ட்டூன்) சீரியல்ல இதேமாதிரி வந்தது’’ என்றார். மதிப்பெண்கள் அல்ல. சமூகத்தை நோக்கிய மதிப்பீடுகளை வளர்க்கவே கல்வி. அதைப் பள்ளி மட்டுமே வழங்குவதில்லை என்று எனக்குக் காட்டிய பவித்ரன் இன்று ஒரு கலைக் கல்லூரி விரிவுரையாளர்.கடைசியாகப் பார்த்தபோது தானே புயலில் பாதித்தவர்களுக்குப் பாயும் பாத்திரங்களும் சேகரிக்க மாணவர்களோடு களத்தில் இருந்தார். தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

Monday, 5 October 2015

பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை.

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மதிப்புக் கூட்டுதல் எனும் மகத்தான கலை முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் மிகையில்லை. சாதாரண ஒரு விவசாயியின் வருமானத்தை, கனவை, ஆசையை மகத்தான ஒன்றாக மாற்றுகிறது மதிப்புக் கூட்டு தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டலைக் கற்றுக் கொண்டால் விவசாயி என்கிற நிலையிலிருந்து தொழில் முனைவர் என்கிற இடத்துக்கும் உயர்ந்து விடுகிறார். பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை. அதே சமயம் கொஞ்சம் மாத்தி யோசித்தால் அந்த பொருட்களையே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கின்றனர் தொழில் முன்னோடிகள். விவசாயி - தொழில்முனைவோர் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது உடனடியாக தீர்க்கக்கூடிய விஷயம் இல்லை என்பதை புரிந்து கொண்டு மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தென்னை விவசாயி தனது விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று காத்திருப்பதைவிட, தென்னை யிலிருந்து கிடைக்கும் பொருட்களை பல்வேறு விதமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். தேங்காய், இளநீர், மட்டைகள் என அப்படியே விற்பனை செய்யாமல் அதை மதிப்புக் கூட்ட பழக வேண்டும். தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் என உற்பத்தி செய்யலாம். தேங்காய் மட்டையை பதப்படுத்தி அதை பித் என்கிற வடிவில் கொண்டு வருகிறபோது அதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. இளநீரை கார்விங் செய்து அழகாக பேக்கிங் செய்தால் ஷாப்பில் மால்களிலும் விற்பனை செய்ய முடியும். தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரி பொருளாக மட்டுமே பார்க்கக்கூடாது. இதை வெளிநாடுகளில் ஒரு முறை பயன்படுத்தும் கப்புகளாக பயன்படுத்து வதால் ஏற்றுமதி செய்யலாம். ஏற்றுமதி கார்பன் தயாரிப்புக்கு பயன்படுத்துவதால் அதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக யோசனை செய்தால் மகத்தான வருமானம் கிடைக்கும் என்பதுதான் உண்மை. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தேங்காய் பவுடரை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பவுடரை சாக்லெட், பிஸ்கட், கேக் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றன. வட இந்தியாவிலும் இதற்கு அதிக சந்தை உள்ளது. தூக்கி எறியும் தேங்காய் மட்டையில் உள்ள நாரைப் பிரித்தெடுத்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் ஐரோப்பிய விவசாயிகள். அவர்களுக்குத் தேவையான நார்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்கிறது. மண் தொட்டியில் தேங்காய் நாரை வைத்து, பத்து லிட்டர் தண்ணீர்வரை ஊற்றினாலும் அப்படியே உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் அதற்கு வரவேற்பு பலமாக உள்ளது. அந்த நாரில் பயிரை வைத்து வளர்க்கிறார்கள். போன்சாய் மரங்களை வளர்ப்பதற்கு இது சிறந்த முறையாக இருந்து வருகிறது. தொழிற்சாலை தேவை இல்லை அதுபோல பால் உற்பத்தியாளர்கள் உரிய விற்பனை விலை கிடைக்க வில்லை, கொள்முதல் இல்லை என பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பல நேரங்களில் கறந்த பாலை கீழே கொட்டியும் அரசின் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மதிப்புக் கூட்டல் முறையில் இதில் மகிழ்ச்சியான லாபம் பார்க்கலாம் என்பதுதான் உண்மை. மேலும் இந்த சிக்கல்களுக்கு மதிப்புக் கூட்டல் முறை இவர்களுக்கு தீர்வாக இருக்கும். முக்கியமாக பாலிலிருந்து பல நாட்கள் கெடாமல் இருக்கும் சீஸ் என்கிற பலாடைக் கட்டி தயாரிக்கலாம். சீஸ் தயாரிக்க பெரிய தொழிற்சாலை தான் தேவை என்றில்லை, சிறிய அளவில் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். பத்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுருக்கி எளிய முறையில் விற்பனை செய்ய முடியும். ஒரு லிட்டர் பாலில் 100 கிராம் சீஸ்தான் தயாரிக்கலாம். ஆனால், நூறு லிட்டர் பாலின் அடக்கவிலை அதிகபட்சம் 3,000 ரூபாய் என்றால் அதிலிருந்து செய்யப்படும் 10 கிலோ சீஸின் குறைந்தபட்ச விற்பனை விலை 4,000 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தியில் 90% சீஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கிறது. எவ்வளவு நாட்கள் என்றாலும் கெட்டுப் போகாது. சீஸின் நாட்கள் கூடக் கூட சுவையும் மணமும் அதிகரிக்குமாம். பல மடங்கு லாபம் நெல்லிக்காய் உற்பத்தி செய்த ஒரு விவசாயி இன்று நெல்லி ஜூஸ் தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். அல்லும் பகலும் கஷ்டப்பட்டு நெல்லிக்காயை நெல்லிக்காயைப் பறித்துக்கொண்டு போனால் ஐந்துக்கும், பத்துக்கும் கேட்டதில் வெறுத்துப்போனவர்தான் ராஜேந்திரன். இன்று நெல்லிக்காயில் இருந்து ஜூஸ், ஜாம், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டு தொழில்முனைவோராக நிற்கிறார். நெல்லி ஊறுகாய், நெல்லி சிப்ஸ், தொக்கு, நெல்லிப் பாக்கு சீவல், நெல்லி குளியல் பவுடர் என பல பொருட்களைத் தயாரிக்கிறார். நெல்லிக்காயை பறிச்சு விற்பனை செய்தால் ரூ.50,000 கிடைக்கும். அதையே மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக விற்பனை செய்கிறபோது பல மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார் இவர். இதைபோல அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல் அவதிப்படும், தக்காளி விவசாயிகள் மாற்றி யோசிக்கலாம். ஜூஸ், ஜாம், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ் என அதிலிருந்து பல பொருட்களை தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டால் வருமான இழப்பைத் தவிர்க்க முடியும். மதிப்புக் கூட்டு கலையால் தேங்காய் மட்டை போன்ற உபபொருட்களைக் கூட விற்கமுடிகிறது. சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பால் சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என்று மாறுகிறபோது நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கிறது. இது போல ஒவ்வொரு தொழிலுலும் ஒன்றை பத்தாக மாற்றும் வித்தையை கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம். பொதுவாக பாரம்பரிய தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் இந்த மதிப்புக் கூட்டலை நம்புவதில்லை. அடுத்த தலைமுறையினர் தொழிலை கையிலெடுக்கும் போதுதான் தொழில் நவீன வடிவம் பெறுகிறது. அதாவது விவசாயி என்ற நிலை மாறி தொழில் முனைவர் என்ற இடத்துக்கு உயர்த்திக்கொள்ளாதவரை விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பேசிக்கொண்டிருக்க வேண்டி யதுதான். அந்த நிலை மாற வேண்டும் என்றால் மதிப்புக்கூட்டல் என்கிற மகத்தான தொழில்வடிவத்தை கற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும். maheswaran.p@thehindutamil.co.in